General01 May 2026

உழைப்பின் மாண்பையும் உரிமைகளையும் போற்றும் 'சர்வதேச தொழிலாளர் தினம்'

'உழைப்பவரே உயர்ந்தவர்' என்ற தத்துவத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளையும், அவர்களின் தியாகங்களையும் நினைவுறுத்தும் நாளே மே தினமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதலாம் திகதியில் 'சர்வதேச தொழிலாளர் தினம்' கொண்டாடப்படுகிறது.

சாதி, மத, இன எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு உன்னதமான தினமாக இது திகழ்கிறது.

19 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருந்தது.

சூரிய உதயம் முதல் மறையும் வரை, 12 முதல் 16 மணிநேரம் வரை அவர்கள் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இதற்கு எதிராக அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 1886 ஆம் ஆண்டு மே மாதம் முதல் திகதியன்று தொழிலாளர்கள் பெரும் போராட்டத்தைத் ஆரம்பித்தனர்.

எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேரம் ஓய்வு, எட்டு மணிநேரம் தூக்கம்' என்ற கோரிக்கையை முன்வைத்து நடந்த இந்தப் போராட்டத்தின் போது, ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நடந்த கலவரத்தில் பல தொழிலாளர்கள் இன்னுயிரை இழந்தனர்

அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலேயே 1889 ஆம் ஆண்டில் பாரிஸில் நடைபெற்ற சர்வதேச சோசலிச மாநாட்டில் மே முதலாம் திகதி 'சர்வதேச தொழிலாளர் தினமாக' அறிவிக்கப்பட்டது.

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற முழக்கத்திற்கேற்ப, அனைத்துத் துறை தொழிலாளர்களையும் ஒரே மேடையில் இன்றைய தினம் இணைக்கிறது.

1886 ஆம் ஆண்டில் தொழிற்சாலை தொழிலாளர்கள் எதற்காகப் போராடினார்களோ, அதே சமூகப் பாதுகாப்பு தேவையை இன்றைய நவீனத் தொழிலாளர்களும் எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே ஒரு தொழிலாளியின் உடல் நலனைப் போலவே அவரது மனநலனும் முக்கியம் என்பதை அங்கீகரிப்பதும், அதற்கான பணிச் சூழலை உருவாக்குவதும் மே தினத்தின் நவீன பார்வையாக மாறியுள்ளது.

மே தினம் என்பது வெறும் விடுமுறை நாள் மட்டுமல்ல, அது உழைப்பவர்களின் உரிமைகளை உறுதி செய்யும், அவர்களின் கண்ணியத்தைக் காக்கும் நாளாகும்.
Related recommendation
Hiru TV News | Programmes