International03 May 2026

தர்ப்பூசணி சாப்பிட்ட குடும்பம் அடுத்தடுத்து உயிரிழப்பு : விசாரணையில் புதிய திருப்பம்

இந்தியாவின் மும்பை நகரின் பைதோனி பகுதியில் வசித்த கணவன், மனைவி மற்றும் அவர்களது இரு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில், குறித்த குடும்பத்தினர் தர்பூசணி சாப்பிட்டதைத் தொடர்ந்து திடீரென வாந்தி மற்றும் மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி தந்தை, தாய் மற்றும் இரு மகள்களும் சில மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை ஆரம்பித்த காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், வீட்டிலிருந்த தர்பூசணி, பிரியாணி, தண்ணீர் மற்றும் மசாலா பொருட்கள் உள்ளிட்ட 11 மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்துள்ளனர்.

மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மேற்கொண்ட முதற்கட்ட பரிசோதனைகளில், உணவுப் பொருட்களில் வெளிப்படையான கலப்படம் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜே.ஜே மருத்துவமனை மருத்துவர் சஞ்சய் சுரசே தெரிவித்ததாவது,

"சாதாரண உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டால் இவ்வளவு வேகமாக உயிரிழப்பு ஏற்படுவது அபூர்வம். இவர்களின் உடல்நிலை மிகவும் வேகமாக மோசமடைந்துள்ளது. எனவே, இது சாதாரண உணவு விஷத்தன்மை அல்லாமல், வேறு தீவிரமான காரணமாக இருக்கக்கூடும்" எனக் குறிப்பிட்டார்.

மேலும், உயிரிழப்பிற்குக் காரணமான உண்மை நிலையைக் கண்டறிய, சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கலிணா தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

அவற்றின் அறிக்கை வெளியான பின்னரே மரணங்களுக்கான துல்லியமான காரணம் உறுதியாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes