General07 May 2026

வருமானத்தை மறைத்ததாக விஜய் மீது முறைப்பாடு: மனுவை விசாரணைக்கு எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வருமானத்தை மறைத்தமை தொடர்பில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்காகப் பட்டியலிடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.

இதன்போது, 'புலி' திரைப்படத்திற்காக அவர் பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தைக் கணக்கில் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை கடந்த பெப்ரவரி மாதம் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த எம். ராஜ்குமார் என்பவர் புதிய மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், வருமான வரித்துறையின் ஆவணங்கள் மற்றும் விஜய்யின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, வருமான வரிச் சட்டத்தின் கீழும், மோசடி மற்றும் சதித் திட்டம் தீட்டியமைக்காக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இது குறித்து அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிடுமாறும் கோரப்பட்டுள்ளது.

குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக, இதனைத் தலைமை நீதிபதி அமர்வுக்கு நீதிமன்றப் பதிவுத்துறை அனுப்பியிருந்தது.

இந்த விடயத்தை ஆராய்ந்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டால், அதனை விசாரணைக்கு உகந்ததா எனத் தீர்மானிப்பதற்கு முன்னர் அதற்குரிய இலக்கத்தை வழங்கிப் பதிவு செய்ய வேண்டியது அவசியம்" எனக் குறிப்பிட்டனர்.

இதனடிப்படையில், இந்த மனுவுக்கு இலக்கமிட்டு, அதனை விசாரணைக்காகப் பட்டியலிடுமாறு நீதிமன்றப் பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன்படி, குறித்த மனு மீதான பதிவுகள் இன்று நிறைவடைந்துள்ள நிலையில், இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes