General07 May 2026

கபில சந்திரசேனவை உடனடியாகக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பிணையில் வழங்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கையூட்டல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது, கையூட்டல் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதன் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்யுமாறு கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்து, வழக்கு விசாரணை முடியும் வரை அவரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு ஆணைக்குழு கோரியது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கலில், சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையூட்டலாகப் பெற்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னரே பிணை வழங்கப்பட்டிருந்தது.

கபில சந்திரசேன தனக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறியுள்ளதாகவும், இதன் மூலம் நீதிமன்றத்தின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளதாகவும் கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை ஒன்றையும் பிறப்பிக்குமாறு ஆணைக்குழு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes