General07 May 2026

மௌனம் காக்கும் நிதியமைச்சு: முறைகேடுகளை மூடிமறைக்க அரசாங்கம் முயற்சியா? - நாமல் குற்றச்சாட்டு

நாட்டில் இடம்பெற்றுள்ள பாரிய நிதிய முறைகேடுகள் காரணமாக 80 கோடி ரூபாவிற்கும் அதிகமான பொதுப்பணம் இழக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹொரண பகுதியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

இந்த நிதிய முறைகேடுகள் குறித்து கடந்த ஜனவரி மாதமே நிதியமைச்சரால் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

"80 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் திருடப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி, நிதிச் செயலாளர், நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி என அனைவரும் இது குறித்து மௌனம் காக்கின்றனர். தற்போதைய நாணய மாற்று விகிதத்தின்படி கணக்கிட்டால் இந்த இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும்" என அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் தனது மேற்பார்வை கடமைகளில் தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரச நிறுவனங்களுக்குள் பொறுப்புக்கூறல் என்பது இல்லாதொழிந்து வருவதாகவும் சாடினார்.

தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறான நிதி முறைகேடுகளால் பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உண்மையான குற்றவாளிகள் விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக, எதிர்க்கட்சிக் குரல்களை அடக்குவதிலேயே அரசாங்கம் குறியாக இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

தொடருந்து நவீனமயமாக்கல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசாங்கம், வெறும் அரசியல் மேடைப் பேச்சுக்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாக விமர்சித்தார்.

பிரிவினைவாதத்திற்கு இந்த நாட்டில் இடமில்லை என வலியுறுத்திய அவர், தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்பான விடயங்களில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நிர்வாக மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் அரசியல் மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில் நாமல் ராஜபக்சவின் இந்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes