General07 May 2026

கொழும்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் சத்தியத்திற்கான போர் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு

பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அவர்கள் காட்டிய தளராத உறுதியைப் போற்றும் வகையில், "மார்க்கா-ஏ-ஹக்" அல்லது "சத்தியத்திற்கான போர்" ஓராண்டு நிறைவு விழா கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் விசேடமான முறையில் நினைவுகூரப்பட்டது.

இதன்போது உரையாற்றிய இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்,

2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடத்தப்பட்ட ஒரு போலித் தாக்குதல் நடவடிக்கை மற்றும் மே 6-7 திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆயுதப்படைகள் மே 10 அன்று தற்காப்புக்காகவும், மிகவும் பொறுப்புடனும் துல்லியமாகவும் பதிலடி கொடுத்ததோடு, இராணுவ நிலைகளை மட்டுமே இலக்கு வைத்தன என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை உறுதி செய்த ஆயுதப்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக இது அமைவதாகவும் தெரிவித்தார்.

இப்பகுதியில் நிலவும் ஸ்திரமற்ற தன்மைக்கு ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்பதை வலியுறுத்திய உயர்ஸ்தானிகர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களுக்கு இணங்க ஒரு நிலையான மற்றும் அமைதியான தீர்வை காணுமாறு அழைப்பு விடுத்தார்.

பாதுகாப்பு விவகாரங்களுக்கு அப்பால், 241 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட பாகிஸ்தானை ஒரு "வாழும் அதிசயம்" என்று வர்ணித்த அவர், தொழில்நுட்பம், தொழில்முயற்சி, இராஜதந்திரம் மற்றும் கல்வித்துறை வரை பல்வேறு துறைகளில் நாட்டின் அபரிமிதமான மனித வளம் மற்றும் திறனை எடுத்துரைத்தார்.

எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகவும், பிராந்திய செழுமைக்காகவும் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பாகிஸ்தான் உறுதியாக இருப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes