General10 June 2026

தேர்தலை ஒத்திவைத்தவர்களின் சிஸ்டத்தை மக்கள் மாற்றிவிட்டார்கள்! ரவிக்கு பிரதமர் ஹரிணி அதிரடிப் பதில்

தேர்தல்களை ஒத்திவைக்கும் கலாசாரத்தைக் கொண்ட தரப்பினர் இன்று சிஸ்டம் சேஞ் பற்றிப் பேசுவது நல்லதொரு அறிகுறி என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த பதிலை வழங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க,

கடந்த தேர்தலில் 53 லட்சம் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும், ஜே.ஆர்.ஜயவர்தன, ரணில் விக்ரமசிங்க போன்ற தலைவர்கள் நாட்டுக்குச் செய்த பொருளாதார பங்களிப்புகளையும், மின்சார உற்பத்தித் திட்டங்களையும் பட்டியலிட்ட அவர், அரசாங்கம் தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,

கடந்த ஒன்றரை வருட காலத்திற்குள் தற்போதைய அரசாங்கம் இரண்டு முக்கிய தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளதை நினைவூட்டினார்.

"தேர்தல்களை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. ஆனால், மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சில சட்டப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இது குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எப்போதும் சட்டபூர்வமாகவும், ஜனநாயக ரீதியாகவும் மட்டுமே செயல்படுவோம்.

ஜனநாயகம் என்ற பெயரை எமக்குத் தேவையானவாறு மாற்றி, லாபம் ஈட்ட நாம் முனையவில்லை" எனப் பிரதமர் குறிப்பிட்டார்.

" செய்ததாகக் கூறும் திட்டங்கள் அனைத்தும் அவ்வளவு வெற்றிகரமாக அமைந்திருந்தால், கடந்த இரண்டு தேர்தல்களில் மக்கள் ஏன் அவர்களது 'சிஸ்டத்தை' தோற்கடித்தார்கள்? அவர்கள் செய்தவற்றின் தோல்வியை மக்கள் உணர்ந்ததாலேயே எங்களது புதிய சிஸ்டத்தை மக்கள் வெற்றிபெறச் செய்துள்ளார்கள். மக்கள் தீர்ப்பின் மூலமே இதற்கான பதில் கிடைத்துவிட்டது" என பிரதமர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes