General12 June 2026

சிறுவர் உழைப்பை ஒழிக்க ஐநா காட்டும் 5 வழிகள்: உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

உலகளாவிய ரீதியில் இன்னும் 138 மில்லியன் குழந்தைகள் சிறுவர் உழைப்பில் சிக்கியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதனை முற்றாக ஒழிப்பதற்கான 5 முக்கிய கோரிக்கைகளை ஐநா அமைப்புகளான UNICEF மற்றும் ILO ஆகியன உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கு முன்வைத்துள்ளன.

இன்றைய உலக சிறுவர் உழைப்பு எதிர்ப்பு தினத்தில், மொரோக்கோவில் எட்டப்பட்ட 'மாரகேஷ் உடன்படிக்கைகளை' உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வருமாறு ஐநா அவசர அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஆண்டுக்கான விழிப்புணர்வுப் பிரசாரங்கள் “சிறுவர் உழைப்புக்கு சிவப்பு அட்டை: குழந்தைகளுக்கு நியாயமான விளையாட்டு, பெரியவர்களுக்கு கண்ணியமான வேலை!” என்ற மையப்பொருளின் கீழ் உலகளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வறுமையின் காரணமாகக் குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுவதைத் தடுக்கவும், அவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்யவும் உலக நாடுகளின் அரசாங்கங்கள் பின்வரும் 5 முக்கிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என ஐநா அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன:

ஏழைக் குடும்பங்களுக்கு உலகளாவிய குழந்தை நலன்புரி உதவிகள் போன்ற சமூகப் பாதுகாப்பு நிதி உதவிகளை வழங்கி, குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆபத்தான மற்றும் அடிமைத் தொழில்களில் உள்ள குழந்தைகளை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களை மீட்கும் பாதுகாப்பு அமைப்புகளை நாடு தழுவிய ரீதியில் பலப்படுத்த வேண்டும்.

கிராமப்புறங்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான மற்றும் இலவசக் கல்வி கிடைப்பதை அரசாங்கங்கள் உறுதி செய்ய வேண்டும்.

குடும்பத்தை நடத்தக் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலையை மாற்ற, குடும்பத்திலுள்ள பெரியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முறையான ஊதியத்துடன் கூடிய கண்ணியமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

வர்த்தக விநியோகச் சங்கிலிகளில் (Supply chains) சிறுவர் உழைப்பு சுரண்டப்படுவதைத் தடுக்க, நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தி, நிறுவனங்களின் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும்.

மில்லியனிலிருந்து 138 மில்லியனாகக் குறைந்துள்ளது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டிற்குள் இதனை முற்றாக ஒழிக்கும் உலகளாவிய இலக்கை எட்ட உலகம் தவறிவிட்டது.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சிறுவர் உழைப்பை முற்றிலும் ஒழிக்க வேண்டுமாயின், தற்போதைய செயல்பாடுகளின் வேகம் 11 மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என ஐநா எச்சரித்துள்ளது.

உலகிலேயே மிக அதிகளவாக ஆப்பிரிக்க பிராந்தியத்தில் மட்டும் 87 மில்லியன் குழந்தைகள் சிறுவர் உழைப்பில் சிக்கியுள்ளனர்.

அதேநேரம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்த வீதம் 3% ஆகக் குறைந்து முன்னேற்றம் பதிவாகியுள்ளது.

உலகளாவிய சிறுவர் உழைப்பில் மிக அதிகளவாக 61 சதவீதமான குழந்தைகள் விவசாயத் துறையிலேயே ஈடுபடுத்தப்படுகின்றனர். சேவைத்துறையில் 27% பேரும், தொழிற்சாலைகளில் 13% பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைப்பருவம் என்பது தொழிற்சாலைகளிலும் வயல்வெளிகளிலும் வாடிப் போவதற்கானதல்ல அது வகுப்பறைகளிலும் விளையாட்டு மைதானங்களிலும் மலர வேண்டியது என்பதை உணர்ந்து, சிறுவர் உழைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் 'சிவப்பு அட்டை' (Red Card) காட்ட வேண்டிய தருணம் இதுவென சர்வதேச சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes