General12 June 2026

இஷாரா செவ்வந்தியை மேலும் 30 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை, மேலும் 30 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட காரணிகளை ஆராய்ந்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு எதிராக இதற்கு முன்னர் பெறப்பட்டிருந்த 30 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு இன்றுடன் (12) நிறைவடைவதனை அடுத்தே, மேலும் 30 நாட்களுக்கான புதிய தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டது.

சந்தேகநபருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த 90 நாட்களுக்கான தடுப்புக்காவல் உத்தரவு 2026/01/15 அன்றுடன் நிறைவடைவதனைத் தொடர்ந்து, மேலும் 90 நாட்களுக்கான தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டிருந்ததாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சுட்டிக்காட்டினர்.

கணேமுல்ல சஞ்சீவ மரணத்துடன் தொடர்புடைய விபரங்களின் அடிப்படையில், தற்போது வெளிநாடுகளுக்குத் தப்பியோடியுள்ள ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் திறந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், ஏனைய சந்தேகநபர்கள் 'ஸூம்' தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes