General15 June 2026

அமெரிக்கா - ஈரான் இடையிலான ஒப்பந்தத்தை அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமையன்று தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

வரும் ஜூன் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இது அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்பின் அறிவிப்பின்படி, இந்த ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டுவரும்.

ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும். எனினும், அந்த நீரிணையில் இன்னும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் செய்ய வேண்டியுள்ளது.

இது அமெரிக்க கடற்படையின் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், நீரிணை வழியாக மீண்டும் எண்ணெய் விநியோகம் சீராக நடைபெற அனுமதிக்கும்.

மேலும், இந்த ஹோர்முஸ் நீரிணையானது இனி முற்றிலும் சுங்கவரி அல்லது கட்டணம் இல்லாத ஒன்றாக மாறும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.

லெபனான் மீதான தாக்குதலின் மூலம் இராஜதந்திர முயற்சிகளை முறியடிக்க இஸ்ரேல் எடுத்த முயற்சிகள் குறித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், இஸ்ரேல் பிரதமர் தனது பார்வையில் "மிகவும் கடினமான ஒரு நபர்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உடன்படிக்கையானது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், இது உலகளாவிய ஸ்திரத்தன்மையையும் அமெரிக்காவின் பாதுகாப்பையும் கொண்டு வரும் என்றும் கூறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி ட்ரம்பிற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், செனட்டர் லிண்ட்சே கிரஹாம் உள்ளிட்ட சில குடியரசுக் கட்சியினர் இதில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்.

இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்கக் குழுவினர் கூறுவதற்கும், ஈரானின் பார்வைக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாகத் தோன்றுவது தமக்கு சற்றே கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த 60 நாள் பேச்சுவார்த்தை காலத்தைத் தொடர்ந்து ஈரானுடன் இறுதியாக எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தமும், மறுஆய்வு மற்றும் வாக்கெடுப்புக்காக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்பதை அவர் அமெரிக்க ஜனாதிபதி நினைவூட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes