General15 June 2026

விமல், கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்டோருக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவங்ச, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (15) கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விபரங்களைச் சமர்ப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் புலனாய்வு விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பாக இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகக் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சலே தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவங்ச, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன, மஹிந்த பத்திரண ஆகியோரால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குறித்த நபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதன்போது நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதவான், இந்த நீதிமன்றத்தின் ஊடாக அவர்களுக்கு அழைப்பாணை பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் குறித்த விபரங்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேநேரம், இந்தச் சம்பவத்தின் மூன்றாவது சந்தேகநபரான சுரேஷ் சலேயின் தற்போதைய நிலையை நேரில் சென்று கண்காணிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியது.

அதற்குப் பதிலளித்த நீதவான், தேசிய மருத்துவமனை அமைந்துள்ள அதிகாரப் பிரதேசத்திற்குரிய மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் நீதவானுக்கு இது குறித்துத் தெளிவுபடுத்தி, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் சந்தேகநபரை நேரில் சென்று கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes