General18 June 2026

மக்களை உலுக்கிய கொடூரம் : தீய ஆவியை விரட்ட மயானத்தில் புதைகுழிகளைத் தோண்டிய பேயோட்டும் குழுவினர்!

தீய ஆவி பிடித்திருந்த ஒரு நோயாளியைக் குணப்படுத்துவதற்காக, பேயோட்டும் சடங்குகளைச் செய்ய ஒரு குழுவினரால் புதைகுழிகள் தோண்டப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கொஸ்கமவில் உள்ள தவல்கொட கால்வாயில் மூழ்கி உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடலங்களும் கொஸ்கம பிரணகம மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தன.

இந்தநிலையில், அவர்களின் புதைகுழிகளை சுமார் இரண்டு அடி ஆழத்திற்குத் தோண்டிய சிலர், அங்கு சடங்குகளைச் செய்துள்ளனர்.

இதனையடுத்து உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டின் பேரில் இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கிய கொஸ்கம காவல்துறை அதிகாரிகள், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதன்போது, பேயோட்டுதலுக்குத் தேவையான பொருட்களை ஏற்றிய பின்னர் ஒரு பாரவூர்தியும், உருந்துருளியும் சம்பவ இடத்திலிருந்து புறப்பட்டு, கொஸ்கம வித்தியாலய மாவத்தையில் உள்ள ஒரு வீட்டிற்கு வந்தடைந்ததைக் கண்டறிந்தனர்.

விசாரணையின் போது, அந்த வீட்டின் உரிமையாளர் இந்தச் சம்பவத்தில் தனது ஈடுபாட்டை ஒப்புக்கொண்டதுடன், மஹியங்கனவைச் சேர்ந்த பேயோட்டும் குழுவினர் தனது மனைவியைப் பிடித்திருந்த தீய ஆவியை விரட்டுவதற்காக பேயோட்டும் சடங்குகளைச் செய்ததாகக் கூறினார்.

இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் அவிசாவெல்ல நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு , பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அத்துடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் கல்லறையை மூடுமாறும் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், குழியில் உடலை வீசியெறிந்த பிறகு சவப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில், சம்பவ இடத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சவப்பெட்டிகளைக் கண்டுபிடிப்பதற்காகக் குழியைத் தோண்ட அந்தப்பகுதி மக்களை அனுமதித்தனர்.

அதேநேரம், சம்பந்தப்பட்ட பேயோட்டுபவர்களைக் கைது செய்ய மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes