General18 June 2026

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை - மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் விசேட குழுக்கள் அமைப்பு

நாடு முழுவதும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்துவதற்காக, மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் செயற்படக்கூடிய விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தக் குழுக்கள் பெயரளவில் மாத்திரம் இயங்காமல், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கான செயற்திட்டங்களை நேரடியாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் என அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுக்கள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அரச, தனியார் நிறுவன வளாகங்களை உன்னிப்பாகக் கண்காணித்து,நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன.

மாவட்டங்கள் முழுவதும் டெங்கு ஒழிப்பு முயற்சிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக, உள்ளூர் அதிகாரிகளுடன் இந்தக் குழுக்கள் நெருக்கமாக இணைந்து செயற்படவுள்ளன.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் வாராந்தம் 30 முதல் 45 நிமிடங்களை தங்களின் வாழும் சூழலைத் தூய்மைப்படுத்துவதற்காக ஒதுக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

"இந்தத் தருணத்தில் நோயாளர்களை மருத்துவமனைகளில் அனுமதித்துச் சிகிச்சை அளிப்பதை விட, நோய் பரவாமல் தடுப்பதே எமது மிக முக்கியமான தேவையாகும்" என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்கனவே மருத்துவமனைகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும், அதனால் தடுப்பு நடவடிக்கைகளே முதன்மையானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேபோன்ற விசேட குழுக்கள் ஏனைய மாவட்டங்களிலும் நியமிக்கப்படவுள்ளதுடன், சமூகம் மற்றும் நிறுவனங்களின் கூட்டு முயற்சியூடாக இந்த நோய் பரவலைக் குறைந்தபட்ச நிலைக்குக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் இலக்கு என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related recommendation
Hiru TV News | Programmes