General18 June 2026

விவசாயிகளை வாழ வைக்க வந்த அரசாங்கம் இன்று அவர்களைக் கைவிட்டுவிட்டது! அம்பாறையில் அறுவடை ஆரம்பம்; உத்தரவாத விலை எங்கே? – சஜித் பிரேமதாச சாடல்

விவசாயிகளை முன்னிலைப்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், இன்று ஒட்டுமொத்த விவசாய சமூகத்தையும் கைவிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

CIFL நிதி நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டுப் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் இன்று (18) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த சமயம் மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் சிந்திய கண்ணீர் இன்று முதலைக் கண்ணீராக மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சாடினார்.

தற்சமயம் ஒட்டுமொத்த விவசாயிகளும் விதை, உரம், விவசாய இரசாயன நாசினிகள், விவசாய உபகரணங்கள், யானை-மனித மோதல்கள் மற்றும் நிலையான விலை இல்லாமை போன்ற பன்முகப் பிரச்சினைகளுக்கும் இடர்பாடுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

நகைகளை அடகு வைத்து அதிக உற்பத்திச் செலவில் விவசாய நடவடிக்கைகளைச் செய்து வந்த விவசாயிகளுக்கு, இறுதியில் அவர்கள் எதிர்பார்க்கும் விற்பனை விலை கிடைக்காமல், விளை பொருட்களைச் சந்தைப் பெறுமானத்திற்கு விற்றுக் கொள்ள முடியாத அவல நிலையே இந்த அரசாங்கத்திலும் நீடிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

"17,000 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு மூட்டை உரத்தை 10,200 ரூபாவிற்குப் பெற்றுத் தருவோம் என்று அமைச்சர் தெரிவித்தார். ஆனால் இன்று நாட்டில் கடுமையான உரத் தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாய நடவடிக்கைகளுக்கான செலவீனங்கள் வானளாவிய ரீதியில் உயர்ந்து காணப்படும் போதிலும், இன்று அறுவடைக்கு நியாயமான விலை இல்லை" என சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.

மேலும், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இருந்த சமயத்தில், வயல்களுக்குள் இறங்கி நின்று கொண்டு ஒரு கிலோ நெல்லிற்கு ரூ. 150 உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என்று பிரஸ்தாபித்தனர். ஆனால், தற்சமயம் அம்பாறை மாவட்டத்தில் நெல் அறுவடைகள் ஆரம்பித்துள்ள போதிலும், ஒரு கிலோ நெல் வெறும் ரூ. 70 - 80 இற்கே விற்பனையாகின்றது. வாக்குறுதி அளிக்கப்பட்ட உத்தரவாத விலை எங்கே என அவர் கேள்வி எழுப்பினார்.

யானை-மனித மோதலினால் பயிர்களும் சொத்துக்களும் சேதமடைந்து, மனித உயிர்களும் யானைகளின் உயிர்களும் அழியும் இவ்வேளையில், அன்று விவசாயிகளுக்காக முரசு கொட்டிய ஆளும் தரப்பினரை இன்று களத்தில் காண முடியாமல் போயுள்ளது.

விவசாய மக்கள் இன்று கண்ணீர் சிந்துமளவிற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்து, போதுமான உணவைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் மந்தபோசண நிலை அதிகரித்து காணப்படுவதுடன், பிள்ளைகளின் பாடசாலைக் கல்வியும் சீர்குலைந்து போயுள்ளது. இந்த பொய்யான அரசியலால் விவசாயிகளும் பொதுமக்களும் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

முன்னர் ஒரு காலத்தில் இயற்கை உரம் என்ற பெயரில் கழிவு உரங்களை வழங்கி விவசாயத்தை அழிக்கும் நடவடிக்கைகள் நடந்தன. இன்றும் கூட விவசாயிகளுக்குத் தரமான உரம் கிடைப்பதில்லை. விவசாயிகளை ஏமாற்றும் பாதையிலேயே இந்த அரசாங்கமும் பயணிக்கின்றது.

விவசாயிகளின் உரிமைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியே இன்று முன்னிற்கின்றது. விவசாயிகளுக்குக் குறைந்தபட்சம் ரூ. 120 உத்தரவாத விலை கிடைக்கும் வரை அவர்களுக்காகத் தொடர்ந்து நாம் குரல் கொடுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes