General19 June 2026

தெல்தெனியவில் சிற்றூந்தில் உடலமாக மீட்கப்பட்ட பெண் : காதலனை தேடி காவல்துறை வலை

தெல்தெனிய ஆதார மருத்துவமனைக்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூந்து ஒன்றில் இருந்து உடலமாக மீட்கப்பட்ட பெண் பிசியோதெரபிஸ்ட்டின் (Physiotherapist) மரணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அவரின் காதலனைக் கைது செய்வதற்கான விசாரணைகளைக் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை நேற்று தெல்தெனிய ஆதார மருத்துவமனையில் விசேட தடயவியல் மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையில் நடைபெற்றது.
இதன்போது மரணத்திற்கான காரணம் குறித்து பகிரங்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிக பரிசோதனைகளுக்காக அவரின் உடல் பாகங்கள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதில் உயிரிழந்த பெண்ணின் கழுத்துப் பகுதியில் பல காயங்கள் காணப்படுவதுடன், மரணம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவரின் காதலனைத் தேடி பல காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் பல தொலைபேசிகளை பயன்படுத்தியுள்ளதுடன், கண்டி, மாத்தளை, குண்டசாலை மற்றும் கன்னொருவ ஆகிய பகுதிகளில் அதிக நடமாட்டத்தைக் கொண்டிருந்தவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண், தனது காதலன் எனக் கூறப்படும் நபருடன் கடந்த 3ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
பின்னர், 16ஆம் திகதி இரவு சிற்றூந்தில் வைக்கப்பட்ட பெண்ணின் உடலம், நேற்று முன்தினம் காலை தெல்தெனிய பகுதிக்குக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு மத்தியில் ,அவர் தங்கியிருந்தமை விடுதியின் அறையிலிருந்து தூக்கிச் செல்லப்படும் சிசிடிவி (CCTV) காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.

சிற்றூந்தில் உடலத்தை வைத்துவிட்டு, அது குறித்து காவல்துறைக்குத் தகவல் வழங்கியதும் அந்த காதலன் எனக் கூறப்படும் நபரே என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, உயிரிழந்த பெண் குறித்து அம்பாறை பொது மருத்துவமனையின் பணிப்பாளர் நிஸங்க விஜேவர்தன ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், "2023ஆம் ஆண்டு முதல் இந்த மருத்துவமனையில் பணியாற்றிய அவர், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பணியிலிருந்து விலகுவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தார்" எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த பெண் கனடா செல்வதற்கான திட்டத்தில் இருந்துள்ளதுடன், அதற்காக பெருமளவு பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளார் எனவும், கனடா செல்ல முடியாமல் போனதாலும், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததாலும் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தற்போதைய உயிரிழந்த பெண்ணின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes