General19 June 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக இலங்கையில் எரிபொருள் விலை 40% அதிகரிப்பு; இன்றைய உலக சந்தை நிலவரம் இதோ

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக உலக சந்தையிலும் உள்நாட்டிலும் எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இந்த யுத்த மோதல்கள் ஆரம்பமாவதற்கு முன்னர், அதாவது கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் ஸ்திரமான மட்டத்தில் காணப்பட்டன.

அதன்படி, ப்ரெண்ட் (Brent) மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 72.87 அமெரிக்க டொலராகவும், WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 67.02 அமெரிக்க டொலராகவும் பதிவாகியிருந்தது.

எவ்வாறாயினும், யுத்த மோதல்கள் தீவிரமடைந்ததை அடுத்து, ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை 126 டொலர் வரையிலும், WTI மசகு எண்ணெய் விலை 115 டொலர் வரையிலும் அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஓரளவுக்கு வீழ்ச்சி காணப்பட்டதுடன், நேற்றைய தினம் ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.64 டொலராகவும், WTI விலை 73.93 டொலராகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. இது கடந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் காணப்பட்ட விலை மட்டத்திற்கு சமமானதாகும்.

எனினும், இன்றைய தினம் விலைகள் மீண்டும் சற்று அதிகரித்துள்ளன. அதன்படி:

ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் இன்றைய விலை - 79.38 அமெரிக்க டொலர் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் இன்றைய விலை:75.45 அமெரிக்க டொலர் உலக சந்தையின் இந்த விலை மாற்றங்கள் உள்நாட்டு எரிபொருள் விலைகளிலும் நேரடியாகப் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் உள்நாட்டில் 6 தடவைகள் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.

இந்த ஒட்டுமொத்த விலை திருத்தங்கள் காரணமாக எரிபொருள் விலைகள் தோராயமாக 40% இனால் அதிகரித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதன்படி, யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் எரிபொருள் விலைகள் பின்வருமாறு அதிகரித்துள்ளன:

ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீற்றர் 141 ரூபாவினாலும் ஒக்டேன் 95 பெட்ரோல் ஒரு லீற்றர் 155 ரூபாவினாலும்,ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 125 ரூபாவினாலும்,சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 149 ரூபாவினாலும்,மண்ணெண்ணெய்ஒரு லீற்றர் 103 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு காரணமாக உள்நாட்டின் பல துறைகளுக்கும் அதேபோன்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதற்கிடையில், உலக சந்தையில் விலை அதிகரிக்கும் போது உள்நாட்டிலுள்ள பழைய இருப்புக்களுக்கும் அதிகாரிகள் உடனடியாக விலையை உயர்த்துவதாகவும், ஆனால் உலக சந்தையில் விலை குறையும் போது விலை சூத்திரத்தை புறந்தள்ளிவிட்டு, "பழைய இருப்புக்கள் முடியும் வரை விலையை குறைக்க முடியாது" என்று கூறி மக்களை சுரண்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் எரிபொருள் விநியோக நடவடிக்கை பிரிவின் ஆலோசகர் சிரில் சுதுவெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் என்ற ரீதியில் அதிக லாபம் ஈட்டிய சந்தர்ப்பங்களைப் போலவே, இவ்வாறான சந்தர்ப்பங்களிலும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes