General20 June 2026

சினிமா, கலைத்துறையை நவீனமயமாக்க தேசிய வேலைத்திட்டம் அவசியம் - சஜித் வலியுறுத்தல்

இலங்கையின் சினிமா மற்றும் கலைத்துறையைப் பாதுகாப்பதற்கும் நவீனமயமாக்குவதற்குமான தேசிய வேலைத்திட்டமொன்று அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (20) இலங்கை சினிமா கலைஞர்கள் சங்கத்தின் பணிப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கலைத்துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடந்த 1960, 1970, 1980 மற்றும் 1990ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் இருந்து கலைத்துறை குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நீண்டகாலமாக உள்ள நிறுவனங்களைப் பாதுகாக்கும் அதேவேளை, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மாறிவரும் ரசிகர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இந்த துறை நவீனமயமாக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பழைய மற்றும் புதிய முறைகள் ஒன்றிணைந்து முன்னோக்கி நகர வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கலைத்துறைக்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்திய சஜித் பிரேமதாஸ, கலைஞர்கள் மற்றும் படைப்புத் தொழில்துறையினரை ஆதரிப்பதற்காக சலுகை வட்டி அடிப்படையிலான கடன் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளார்.

நிதி உதவி வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல், படைப்புகள் ரசிகர்களைச் சென்றடைவதற்கான வழிகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் எனவும், இல்லையெனில் கலைஞர்கள் கடன் சுமைக்கு ஆளாக நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரம்பரிய ஊடகங்களுடன் இணைந்து யூடியூப் (YouTube), நெற்ஃபிளிக்ஸ் (Netflix) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற வளர்ந்து வரும் புதிய தளங்களையும் தொழில்நுட்பங்களையும் இந்த துறையை வலுப்படுத்துவதற்காகப் பயன்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை ஓர் அரசியல் பகடைக்காயாக மாற்றக் கூடாது எனத் தெரிவித்த அவர், அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் தேசிய சினிமா வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக கலைஞர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் எனவும், இதற்கான விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes