General21 June 2026

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல்: 112 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளுக்கு அபாய எச்சரிக்கை

இலங்கையில் டெங்கு நோய் பரவக்கூடிய அபாயமுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 45,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமான அதிகரிப்பாகும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் அதிகளவானோர் மஹரகம சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலிருந்தே பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்தின், களுத்துறை மாவட்ட பாணந்துறை மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பியகம ஆகிய பகுதிகளிலும் டெங்கு நோய் மிக வேகமாகப் பரவி வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, கண்டி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள பல மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளின் தங்கி சிகிச்சைப் பெறும் அறைகள் தங்களது அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடைந்தாலும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களது சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தலையீடுகள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போதிலும், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதில் பொதுமக்கள் காட்டும் அலட்சியம் இன்னும் ஒரு முக்கிய சவாலாகவே உள்ளதாக பிரஷிலா சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நோய் பரவல் மேலும் மோசமடைவதைத் தடுக்கும் நோக்கில், இந்த வார இறுதியில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களையும் சுற்றாடலையும் சுத்தப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை தத்தமது வீடுகளிலும் சுற்றாடலிலும் நுளம்புகள் பெருகும் இடங்களை முற்றாக
ஒழிப்பது பொதுமக்களின் பொறுப்பாகும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 
Related recommendation
Hiru TV News | Programmes