General23 June 2026

சுரேஷ் சலேயை குறிவைத்து ராஜபக்சக்களை பழிவாங்க திட்டம்!

தற்போதைய அரசாங்கம் சுரேஷ் சலேயை குறிவைத்து, இறுதியாக ராஜபக்ச குடும்பத்தினரைப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.

சலகுண அரசியல் விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவரும் நோக்கிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சாகர காரியவசம் முற்றாக மறுத்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர்:

"2019ஏப்ரல் மாத்திலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. ஆனால் 2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலிலேயே பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை இணைந்திருந்தன.

அப்போதே எந்தவொரு தேர்தலிலும் பெரும்பான்மை வெற்றியைப் பெறுவதற்கான அரசியல் பின்னணி எங்களுக்குச் சாதகமாக ஏற்கனவே உருவாகியிருந்தது. எனவே, ஆட்சிக்கு வர இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட வேண்டிய தேவை இருக்கவில்லை" என்றார்.

மேலும், நாட்டின் யாருக்காவது இந்தச் சம்பவம் குறித்து சந்தேகம் இருந்தால், அது குறித்து முறையான விசாரணை நடத்தி, சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதை தாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சுரேஷ் சலேக்கு ஏன் இந்தளவுக்குச் சித்திரவதைகள் செய்யப்படுகின்றன என்ற கேள்விக்கு விடையளித்த அவர், தற்போதைய அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்திற்கு ராஜபக்சக்கள் மீதான அச்சத்தின் காரணமாகவே இத்தகைய விடயம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாம் எப்போதும் சட்டத்தை மதிப்பதாகக் கூறிய சாகர காரியவசம், அரசாங்கத்திடம் ஏதேனும் உண்மையான சாட்சியங்கள் இருந்தால் அவற்றை அநாகரீகமான முறையில் மறைக்காமல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சவால் விடுத்தார்.

முறையான சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்குப் பதிலாக, தற்போது ஒருவரைக் கைது செய்து, அடித்து, அநாகரீகமான முறையில் சித்திரவதை செய்து செயற்கையாகச் சாட்சியங்களை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes