General23 June 2026

ஆட்பதிவு திணைக்கள அதிகாரிகளின் பெயரில் புதிய வட்ஸ்அப் மோசடி!

ஆட்பதிவு திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேற்றப்படுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மோசடிச் செய்திகள் மிகவும் உத்தியோகபூர்வமான மற்றும் நம்பகமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஏமாற்றமடைவதற்கான அதிக ஆபத்து உள்ளதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மோசடி எவ்வாறு நடக்கிறது?

மோசடிக்காரர்கள் ஆட்பதிவு பதிவு திணைக்களத்தின் பெயர், தொடர்பு விபரங்கள் மற்றும் ஆணையாளர் நாயகத்தினால் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் உத்தரவுகளைப் பயன்படுத்தி வட்ஸ்அப் மூலம் போலி அறிவிப்புகளை அனுப்புகின்றனர்.

நுகர்வோரை நம்பவைப்பதற்காக, அவர்களின் முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை எண் மற்றும் வீட்டு முகவரி ஆகியவற்றை உள்ளடக்கி இந்தச் செய்திகள் அனுப்பப்படுகின்றன.

அடையாள அட்டைச் சட்டத்தின் கீழ், விபரங்களை முறைப்படுத்துவதற்கும் சரிபார்ப்பதற்கும் திணைக்களத்துக்கு சமுகமளிக்க வேண்டும் எனக் கூறி, அதற்கான திகதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை போலிச் செய்தியில் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் மற்றும் கட்டைவிரல் அடையாளச் சரிபார்ப்பு (Biometric verification) போன்ற விபரங்களும் அதில் சேர்க்கப்பட்டிருக்கும்.

குறிப்பிட்ட நேரத்துக்குச் சமுகமளிக்காவிட்டால், அடையாள அட்டையுடன் தொடர்புடைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என எச்சரிப்பதுடன், நேரத்தை மாற்றுவதற்கென ஒரு போலி உதவி எண்களையும் வழங்குகின்றனர்.

பொதுவாக, இந்தச் செய்திகள் நேர்முகப்பரீட்சைக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குச் சற்று முன்னதாகவே அனுப்பப்படுவதால், பொதுமக்கள் அவசரத்திலும் பயத்திலும் அந்தப் போலி உதவி எண்களைத் தொடர்பு கொள்கின்றனர்.

இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் மோசடிக்காரர்கள், வாடிக்கையாளர்களின் ஒற்றை முறை கடவுச்சொற்கள் மற்றும் வங்கி விபரங்களைப் பெற்று நிதி மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

ஆட் பதிவு திணைக்களம் எவ்வித அடையாளச் சரிபார்ப்புகளையும் அல்லது உத்தியோகபூர்வ அறிவிப்புகளையும் வட்ஸ்அப் மூலம் மேற்கொள்வதில்லை என கணினி அவசர பதிலளிப்பு பிரிவு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் இவ்வாறான செய்திகளுக்குப் பதிலளிப்பதையோ, சந்தேகத்துக்கிடமான இணைப்புகளை (Links) அழுத்துவதையோ அல்லது சரிபார்க்கப்படாத எண்களைத் தொடர்பு கொள்வதையோ தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.

எந்தவொரு சூழ்நிலையிலும் உங்களது OTP எண்களையோ அல்லது வங்கி விபரங்களையோ யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes