General23 June 2026

அமெரிக்காவிடமிருந்து 4 மில்லியன் டொலர் பெறுமதியான செய்மதித் தொடர்பு கட்டமைப்பு!

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களின் கடல்சார் தொடர்பு மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவினால் சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அதிநவீன 'ஃப்ளீட் பிரோட்பேண்ட்' (Fleet Broadband) செய்மதித் தொடர்பு கட்டமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள 'SLNS கஜபாஹு' கப்பலில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில்,பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் எஸ். போல் கபூர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உலகின் பரபரப்பான கடல் வழித்தடங்களில் இலங்கையின் கடல்சார் தொடர்புகளை வலுப்படுத்துவதற்காக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கப்பல்களுக்கு இடையேயும், கப்பல்களுக்கும் கரைக்குமிடையேயும் பாதுகாப்பான குரல் மற்றும் தரவு பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

அத்துடன், இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் கடற்படைத் தலைமையகம் உடனுக்குடன் (Real-time) தொடர்புகளைப் பேணவும் இது வழிவகுக்கும்.

இந்த புதிய வசதி மூலம் கடல்சார் விழிப்புணர்வு மற்றும் பிராந்திய பங்காளிகளுடனான தகவல் பகிர்வு மேம்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த முறையில் செயற்படவும், சர்வதேச கடல் வழித்தடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முடியும் என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் வர்த்தக அதிகாரி ஜெயின் ஹாவெல் மற்றும் பாதுகாப்பு அமைச்சு, கடற்படை உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Related recommendation
Hiru TV News | Programmes