General24 June 2026

உரிமைக்காக போராடினால் விவசாயி 'கசிப்புக்காரனா'? - அரசாங்கத்திற்கு விழுந்த சாட்டையடி கேள்வி!

உரிமைக்காக போராடினால் விவசாயி 'கசிப்புக்காரனா' என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.

தேர்தல்களின் போது விவசாயிகளிடம் சென்று ஆதரவு திரட்டிய அரசியல்வாதிகள், தற்போது நாடாளுமன்றத்திற்கு வந்து தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளை "கசிப்புக்காரர்கள் என்றும் திருடர்கள் என்றும் முத்திரை குத்த எத்தனிக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு நெருக்கமான தொழிலதிபர்கள் ஏக்கர் கணக்கில் காடுகளை அழிக்க "முதலீட்டாளர்கள்" என்ற பெயரில் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு சாதாரண ஏழை மனிதன் ஒரு கழிப்பறை குழி தோண்டவோ அல்லது வீட்டின் அடித்தளம் அமைக்கவோ முற்பட்டால் அனைத்துச் சட்டங்களும் மிகக் கடுமையாகப் பாய்கின்றன.

க்ளீன் ஸ்ரீ லங்கா 'Clean Sri Lanka' போன்ற திட்டங்கள் வெறும் விளம்பரத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையிலும், ஒரு பகுதியில் 10 நோயாளிகளாவது இருந்தால்தான் புகை விசிற முடியும் என உள்ளூராட்சி சபைகள் அலட்சியமாகப் பதிலளித்தன.

மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து அரிசி, மீன் மற்றும் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

"விவசாயிகள் அறுவடை செய்யும் காலப்பகுதியைப் பார்த்து வெளிநாடுகளில் இருந்து அரிசி மற்றும் காய்கறிகளை அரசாங்கம் இறக்குமதி செய்கிறது. இதனால் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகள் வீதிக்கு இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் வீதிக்கு இறங்கினால், அவர்களைக் கசிப்புக்காரர்கள் என்று அரசாங்கம் முத்திரை குத்துகிறது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes