General25 June 2026

நிலைமை தீவிரம்: டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் வேகமாக அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தரவுகள் தெரிவிகின்றன.

நடப்பு ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக 29 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், நாடு முழுவதும் இனங்காணப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 48,287 ஆக உயர்வடைந்துள்ளது.

மொத்த நோயாளர்களில் 25,167 பேர் மேல் மாகாணத்தில் (52.12%) மட்டுமே பதிவாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியாக கொழும்பில் 10,085 பேரும், கம்பஹாவில் 9,093 பேரும், மாத்தறையில் 3,451 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 3,000 க்கும் அதிகமானோரும், காலி மற்றும் கண்டி மாவட்டங்களில் 2,700 க்கும் அதிகமானோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, டெங்கு அதி அபாயகர வலயங்களாக 112 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் மாதமொன்றில் பதிவான அதிகூடிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இந்த ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளது.

ஜூன் மாதத்தின் கடந்த 24 நாட்களில் மட்டும் 14,446 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நோயாளர்களின் சடுதியான அதிகரிப்பால் களுபோவில போதனா மருத்துவமனை, ஐ.டி.எச் (IDH) மருத்துவமனை, மாத்தறை மற்றும் ஹோமாகம மருத்துவமனைகள் தங்களின் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளன.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக குமாநாயக்கவின் கையொப்பத்துடன் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஜூன் 26 ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கட்டுமானப் பகுதிகளை வாரத்திற்கு இருமுறை பரிசோதித்து, டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது அந்தந்த நிறுவனத் தலைவர்களின் நேரடிப் பொறுப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவறுபவர்களுக்கு எதிராகச் தராதரமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அதிகாரிகள் நேரடியாகச் செல்ல முடியாத உயரமான கட்டிடங்கள் மற்றும் இடங்களைச் சோதனையிட இலங்கை விமானப் படையினரின் உதவியுடன் ட்ரோன் (Drone) கெமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பத்தரமுல்ல மற்றும் கட்டுவான போன்ற பகுதிகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) மேற்கொண்ட சோதனைகளின் போது, ஏற்கனவே நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்ட இடங்களிலும் மீண்டும் நுளம்புக் குடம்பிகள் கண்டறியப்பட்டதால் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்புப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த விசேட செயலணி கலைக்கப்பட்டதன் விளைவையே மக்கள் தற்போது அனுபவித்து வருவதாக பொது சுகாதார பரிசோதரகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற போதிலும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மருத்துவ பணிக்குழாமினரை கொண்டே இயங்க வேண்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பின், இந்த பணிக்குழாமினர் கடும் மன அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, டெங்கு நோயை எந்த வழியிலாவது கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொதுவாக டெங்கு நுளம்புக் குடம்பிகளின் அடர்த்தியைக் குறிக்கும் 'Breteau Index' குறியீடு 5க்குக் கீழ் இருக்க வேண்டும். ஆனால் தற்போது சில மாவட்டங்களில் இந்த குறியீடு 25 வரை (5 மடங்கு) அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, வரும் வாரத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes