General29 June 2026

தாய்லாந்தில் 17 வயது சிறுமி, பயணப்பொதியில் இருந்து உடலமாக மீட்பு: அவுஸ்திரேலியர் கைது

தாய்லாந்தின் பட்டாயா நகரில் 17 வயது சிறுமி ஒருவர் பயணப்பொதியில் இருந்து உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
பட்டாயா நகரில் 17 வயது சிறுமியான துஞ்சனோக் டோன்ஹோம்லா கடந்த வெள்ளிக்கிழமை மாலை காணாமல் போனதாகப் முறையிடப்பட்டது.

பின்னர், சனிக்கிழமை அதிகாலை, தொடருந்து பாதைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த ஒரு பெரிய பயணப்பொதிக்குள் இருந்து அவர் உடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சைமன் பீட்டர் கார்மன் என்ற அவுஸ்திரேலியர் நாட்டை விட்டுத் தப்பிக்க முயன்றபோது பேங்கொக் சுவர்ணபூமி வானூர்தி நிலையத்தில் வைத்து தாய்லாந்து காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குறித்த சிறுமியை ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு கார்மன் அழைத்துச் சென்றதும், பின்னர் அவர் மட்டும் பெரிய பயணப்பொதியுடன் வெளியே வந்ததும் தெரியவந்தது.

அந்த பயணப்பொதியை உந்துருளியில் ஏற்றிச் சென்று தொடருந்து பாதை அருகே அவர் வீசியதும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் கார்மன் மீது கொலைக் குற்றம், உடலை மறைத்தல் மற்றும் சிறுமியை பாலியல் நோக்கத்திற்காக அழைத்துச் சென்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கார்மன், இது தற்காப்புக்காக நடந்ததாகவும், அது தனது கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இருப்பினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அவர் வருத்தம் தெரிவிக்கும் செய்தியையும் பதிவு செய்துள்ளார்.

சிறுமி உயிரிழந்தது குறித்து அவரது தந்தை ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், குற்றவாளிக்குச் சட்டப்படி கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என அவரது வளர்ப்புத் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes