General02 July 2026

முதியோர் இல்லங்களை பதிவு செய்வதற்கு செப்டம்பர் வரை காலக்கெடு

நாட்டிலுள்ள பதிவு செய்யப்படாத அனைத்து முதியோர் இல்லங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ள வேண்டும் என முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.

இது குறித்து முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் தெரிவிக்கையில்,

பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் குறித்த தகவல்களைச் சேகரிப்பதற்காக தற்போது நாடளாவிய ரீதியில் விசேட கணக்கெடுப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இதுவரை தங்களது விபரங்களை வழங்காத முதியோர் இல்லங்களின் நடத்துனர்கள், செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள கூகுள் படிவத்தை (Google Form) பூர்த்தி செய்து தேவையான விபரங்களை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள விசேட திட்டங்களின் பலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு முதியோர் இல்லங்களின் பதிவு இன்றியமையாதது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை முறையான பதிவின்றி ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர்களுக்குத் தங்குமிட வசதி அளித்து பராமரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

"நாடு முழுவதும் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் 311 முதியோர் இல்லங்களை நாம் தற்போது அடையாளம் கண்டுள்ளோம். அவை அனைத்தும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது பதிவுகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தனித்தனியாக அறிவித்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes