General02 July 2026

ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் 4 பேர் விபத்துக்களால் பலி : தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிகள் என்ன?

நாட்டில் பல்வேறு விபத்துகள் காரணமாக தினமும் சராசரியாக சுமார் 30 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் விசேட மருத்துவ நிபுணர் சமித்த சிறிதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 8,000 முதல் 10,000 பேர் வரை பல்வேறு விபத்துகளால் உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சராசரியாக ஒவ்வொரு 3 மணித்தியாலத்திற்கும் 4 பேர் உயிரிழப்பதாகவும் மருத்துவ நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும், போக்குவரத்து விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் பற்றியே அதிகம் பேசப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கீழே வீழ்ந்து ஏற்படும் விபத்துகள், நீரில் மூழ்குதல், மின்சாரம் தாக்குதல் மற்றும் பாம்புக் கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் கணிசமான அளவில் உயிரிழப்புகள் பதிவாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வு மூலம் தடுக்கக்கூடியவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தடுப்பதற்குரிய காரணங்கள் இல்லாதமையால் இந்தளவான உயிர்கள் இழக்கப்படுவது தேசிய அளவில் மிகப் பெரிய துயரமான நிலை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

எனவே, வீடு, பணியிடம், பாடசாலை மற்றும் வீதிகளில் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் எனவும் சுகாதார அமைச்சின் விசேட மருத்துவ நிபுணர் சமித்த சிறிதுங்க வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes