General07 July 2026

"ஆட்சிக்கு வந்ததும் முதலில் புதையல் தான் தோண்டினீர்கள்" - நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக சாடல்!

தொல்பொருட்கள் மற்றும் நாட்டின் சொத்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறும் தற்போதைய அரசாங்கம், ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் முதன்முதலில் புதையல் தோண்டும் பணியையே மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதையலைத் தோண்டி எடுப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்ற பிரசாரத்துடனேயே அரசாங்கம் தனது பயணத்தைத் தொடங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இராணுவம் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் (STF) பலத்த பாதுகாப்புடன், அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டுடனேயே இந்த புதையல் தோண்டப்பட்டதாக அவர் சபையில் பகிரங்கமாகக் குறிப்பிட்டார்.

அப்போதைய ஆளும் தரப்பு அமைச்சர் ஒருவர் புதையல் தோண்டப்படும் இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், அதுகுறித்த உத்தியோகபூர்வ ஊடக அறிக்கைகளையும் வெளியிட்டிருந்ததை அவர் நினைவுபடுத்தினார்.

"மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, புதையல் தேடுவதிலேயே அரசாங்கம் குறியாக இருந்தது. தற்போது அனைத்தும் தோல்வியில் முடிந்த பின்னர், சபையில் வந்து கூச்சலிடுவதில் எந்தப் பயனும் இல்லை" என அவர் மேலும் சாடினார்.
Related recommendation
Hiru TV News | Programmes