General07 July 2026

புதையல் திருட்டுக்கு பின்னால் அரசியல் பின்னணி": பிரேமதாச, ராஜபக்ச குடும்பங்கள் குறித்து சபையில் குற்றச்சாட்டு!

நாட்டில் இடம்பெறும் புதையல் தோண்டல் மற்றும் தொல்பொருள் திருட்டுகளுக்குப் பின்னால் அரசியல் அதிகாரத்தின் நேரடித் தலைமைத்துவமும் ஆதரவும் இருப்பதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று களஆய்வு செய்ததாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் , அங்கு பரவலாகப் புதையல் தோண்டப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளின் பாதுகாப்பு இன்றி இவ்வாறான பாரிய குற்றங்கள் தன்னிச்சையாக நடக்க வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல்வாதிகளின் தலையீட்டுடன் புதையல் தோண்டும் இந்த மோசமான கலாச்சாரம் 1990-களில்தான் நாட்டில் ஆரம்பமானதாக அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் உயர் காவல்துறை அதிகாரிகள் (DIG) கூட இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டமையை அவர் நினைவூட்டினார்.

நாட்டின் பெறுமதிமிக்க தொல்பொருட்கள் மற்றும் புதையல் திருட்டுகள் குறித்துப் பேசும்போது, இலங்கையின் அரசியல் தலைமைத்துவத்தில் இருந்த இரு பிரதான குடும்பங்களின் பெயர்கள் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, 'பிரேமதாச' மற்றும் 'ராஜபக்ச' ஆகிய இரு குடும்பங்களின் பெயர்களையும் அவர் சபையில் பகிரங்கமாகக் குறிப்பிட்டார்.

இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான தொல்பொருள் விவகாரங்களில் இருந்து அரசியல் தலையீடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், தேசிய சொத்துக்களைப் பாதுகாத்து மக்களின் உரிமைகளை மக்களிடமே ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes