General09 July 2026

இரு பெயர்கள், சட்டவிரோதமாக அரச சலுகைகள்: இலங்கைத் தமிழர் கைது!

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இலங்கை தமிழர் ஒருவர், தனது அடையாளத்தை மறைத்து சட்ட விரோதமாக இந்திய அரச ஆவணங்களைப் பெற்றுப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சின்னசேலம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த தங்கவேல் புகழேந்திரன் (39) என்ற இவர், கடந்த 2017ஆம் ஆண்டு அந்த பகுதியைச் சேர்ந்த சாமிராபானு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு, புகழேந்திரன் தனது மதத்தை மாற்றிக்கொண்டு மொஹமட் சபீர் என்று பெயரையும் மாற்றிக்கொண்டார்.

இந்த நிலையில், தான் ஒரு இலங்கை தமிழர் என்பதை மறைத்து, இந்திய அரசின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை (ரேஷன் கார்ட்) மற்றும் வருமான வரி அடையாள அட்டை (PAN கார்ட்) ஆகியவற்றை சட்டவிரோதமாகப் பெற்று கடந்த 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.

அத்துடன், ஏதிலிகள் முகாமில் புகழேந்திரன் என்ற பெயரிலும், வெளியில் மொஹமட் சபீர் என்ற பெயரிலும் அவர் அரச நலத்திட்ட உதவிகளைப் பெற்று வந்தமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்த உளவுத்துறையின் ரகசியத் தகவலையடுத்து, கள்ளக்குறிச்சி காவல்துறையினர் புகழேந்திரன் என்கின்ற மொஹமட் சபீரை கைது செய்தனர்.

இந்த மோசடி விவகாரத்தில், தொடர்புடைய நபர் போலி ஆவணங்களை எப்படிப் பெற்றார் என்பது குறித்தும், ஏதிலிகள் முகாமில் வசிக்கும் மற்றவர்கள் இதுபோன்று இந்திய அரச ஆவணங்களைப் பெற்றுள்ளனரா என்பது குறித்தும் காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes