General09 July 2026

பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணம் : நான்கு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

கண்டி - தெல்தெனியவில் சிற்றூந்து ஒன்றினுள் உடலமாக மீட்கப்பட்ட பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும், இன்று (09) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை காவல்துறை பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஆகிய நால்வரும் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.

கடந்த ஜூன் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்களுக்கு, இன்று வரை விளக்கமறியல் உத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 17 ஆம் திகதி தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகில் சிற்றூந்து ஒன்றிலிருந்து குறித்த பெண் மருத்துவரின் உடலம் மீட்கப்பட்டிருந்தது.
பிரேத பரிசோதனையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டே உயிரிழந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் காதலர் எனக் கூறப்படும் பிரதான சந்தேகநபர், யாழ்ப்பாணத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes