General09 July 2026

சிறுவர் பாதுகாப்புக்குத் தேசிய நெருக்கடி?" – நாடாளுமன்றத்தில் கேள்விகளை அடுக்கிய சஜித்

தீர்க்கப்படாத சிறுவர் துஷ்பிரயோகப் பிரச்சினைகள் காரணமாகச் சிறார்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

2015 முதல் 2026 ஜூன் வரையான காலப்பகுதியில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைத்த முறைப்பாடுகள், அவற்றில் விசாரிக்கப்பட்டவை மற்றும் நிலுவையில் உள்ளவற்றின் எண்ணிக்கை, அத்துடன் நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் விபரங்களை எதிர்க்கட்சித் தலைவர் கோரியுள்ளார்.

கடந்த 5, 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு முந்தைய காலப்பகுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விபரங்களைக் கோரிய அவர், இந்த வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கைகள் என்ன எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு, ஜனாதிபதி வாக்குறுதியளித்தபடி விசேட காவல்துறை விசாரணைப் பிரிவொன்று அமைக்கப்படுமா என அவர் வினவியுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை சுயாதீனமான மற்றும் வினைத்திறனான அமைப்பாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்ன என அவர் வினவினார்.

2025-2029 தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நிபுணர் குழு மற்றும் சிறார்களை உடல் ரீதியாகத் தண்டிப்பதை ஒழிப்பதற்கான சட்டத் திருத்தங்கள் எப்போது சபையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தற்போதைய சிறுவர் பாதுகாப்புச் சூழலை ஒரு 'தேசிய சிறுவர் பாதுகாப்பு நெருக்கடியாக' அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா எனவும், ஜனாதிபதி தலைமையில் அமைச்சுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புடன் கூடிய தேசிய நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படுமா எனவும் அவர் வினவியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes