General13 July 2026

இன்று மீண்டும் திறக்கப்படுகிறது கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம்!

டெங்கு அச்சுறுத்தல் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம், இன்று (13) முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தைத் திறப்பதற்கு முன்னதாக, 'க்ளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் கீழ், பல்கலைக்கழக வளாகத்தைச் சுத்தப்படுத்தும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நேற்று (12) நாள் முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் 'க்ளீன் ஸ்ரீலங்கா' செயலகத்தினால் வழிநடத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், வளாகத்தைச் சுத்தம் செய்தல், புகை விசிறுதல் மற்றும் நுளம்பு குடம்பிகள் பெருகும் இடங்களைச் சோதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக கொழும்பு மாநகரசபையின் பொரளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், இராணுவம், கடற்படை மற்றும் பல்கலைக்கழகப் பணியாளர்கள் ஒன்றிணைந்திருந்தனர்.

வளாகத்தைச் சுத்தப்படுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கலாநிதி சானி இம்புல்கொட, வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுத்திகரிப்புப் பணிகளைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தை இன்று (13) முதல் திறக்க முடியும் என்று தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes