General14 July 2026

கணினி முன் வேலை செய்பவர்களே கவனம் - உடனே மாற்ற வேண்டிய பழக்கங்கள்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பெரும்பாலானோர் கணினி மற்றும் மடிக்கணினிகளில் , மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரியும் சூழல் நிலவுகிறது.
 
இந்த வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக, கழுத்து வலி, தோற்பட்டை விறைப்பு, முதுகு வலி மற்றும் டெக் நெக் போன்ற பாதிப்புகள் தற்போது இளைஞர்களிடையேயும் அதிகரித்து வருகின்றன.

இத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்கவும், நீண்டகால ஆரோக்கியத்தைப் பேணவும் சுகாதார நிபுணர்கள் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

1. கணினித் திரையை எப்போதும் கண் மட்டத்திற்கு அல்லது அதற்குச் சற்று கீழே வைக்க வேண்டும். இது கழுத்து முன்னோக்கி வளைவதைத் தடுக்கும்.

2. பணிபுரியும் போது முதுகை நேராக வைத்து, தோள்களைத் தளர்வாக வைத்திருக்க வேண்டும்.

3. நாற்காலியானது கீழ் முதுகிற்கு (Lower back) முழுமையான ஆதரவை அளிப்பதாக அமைய வேண்டும்.

4. முழங்கைகள் 90 முதல் 100 பாகை கோணத்தில் இருக்கும் வகையில் விசைப்பலகையை முழங்கை மட்டத்தில் அல்லது அதற்குக் கீழே நிலைநிறுத்த வேண்டும்.

5. கைகளை உயர்த்தித் தட்டச்சு செய்வது தசைகளை விரைவாகச் சோர்வடையச் செய்து வலியை அதிகரிக்கும் என்பதால், கைகளைத் தளர்வாக வைத்துத் தட்டச்சு செய்வது அவசியம்.

6. நிபுணர்களின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு 30 முதல் 45 நிமிடங்களுக்கு ஒருமுறை இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

7. இடைவேளையின் போது எழுந்து நடப்பதும், கழுத்தை மெதுவாக முன்னும் பின்னும் அசைப்பதும் தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

8. மடிக்கணினியில் வேலை செய்பவர்கள் மடிக்கணினி ஸ்டாண்டுகளைப் பயன்படுத்துவது அவசியம். இது திரையை கண் மட்டத்திற்கு உயர்த்த உதவும்.

மடிக்கணினியுடன் வெளிப்புறக் விசைப்பலகை மற்றும் சுட்டியைப் பயன்படுத்துவது கழுத்து மற்றும் தோள்களில் ஏற்படும் அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கும்.

தொடர் வலியால் அவதிப்படுபவர்கள் சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து, உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது. சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பெரிய உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்க முடியும்.
Related recommendation
Hiru TV News | Programmes