General14 July 2026

உண்மையான விவசாயிகள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் - வசந்த சமரசிங்க

அரசாங்கம் நெல்லுக்கான நியாயமான மற்றும் உத்தரவாதமான விலையை வழங்கி, அதனை கொள்வனவு செய்யும் முறையான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளமையால், நாட்டின் விவசாயிகள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு உறுப்பினர் டிஜிட்டல் நுழைவாயிலை (Cooperative Member Digital Portal) அறிமுகம் செய்யும் நிகழ்வில் நேற்று (14) கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நெல் கொள்வனவை முறையான திட்டமிடலுடன் மேற்கொள்வதற்காக அரசாங்கம் அதிக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"2025 ஆம் ஆண்டை விட 2026 ஆம் ஆண்டுக்காக 10,000 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கியுள்ளோம். அறுவடை கூட இன்னும் முழுமையாக ஆரம்பிக்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில், விவசாயிகள் அதிருப்தியில் இருப்பதாக யாராவது கூறினால், அவர்கள் விவசாயிகளாகக் காட்டிக்கொள்ளும் வேறு யாரோ ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால், உண்மையான விவசாயிகள் இப்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்." என்றார்.

அரசாங்கம் நெல் கொள்வனவுச் செயற்பாட்டில் நேரடியாகத் தலையிட்டதன் காரணமாக, தனியார் துறையினரும் நெல் கொள்வனவு விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த சில நாட்களில் தனியார் துறையினரும் நெல் கொள்வனவு விலையை 112 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும், இதன் மூலம் விவசாயிகள் தமது விளைச்சலுக்கு அதிகப்படியான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes