General15 July 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை துயரம்: பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கக் கோரிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் மற்றும் கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டபோது நிகழ்ந்த மரணங்கள் குறித்து, மக்கள் சார் கூட்டு எதிர்க்கட்சி விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான, நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த 5ஆம் திகதி மாலைக்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், மோதலில் ஈடுபட்ட கைதிகளையும் சிறைச்சாலை அதிகாரிகளையும் தனித்தனியாகப் பிரித்து வைக்க அதிகாரிகள் தவறியமையே நிலைமை மோசமடையக் காரணம் என அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், 6ஆம் திகதி காலை கைதிகள் உணவு அருந்திக் கொண்டிருந்த வேளையில், சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களை நோக்கிச் சென்றது, கைதிகளைக் கோபமூட்டும் செயலாக அமைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்த வாய்ப்புகள் இருந்தும், சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கதவின் துளை வழியாக தானியங்கித் துப்பாக்கியால் சுட்டதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என அந்த அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.

சிறைச்சாலைக்குள் இவ்வாறான துயரச் சம்பவங்கள் மற்றும் உயிர் இழப்புகள் நிகழ்ந்து வருகின்ற நிலையில், இது குறித்த அவசரக் கூட்டங்களில் கலந்துகொள்வதையோ அல்லது நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலவரத்தைப் பார்வையிடுவதையோ சம்பந்தப்பட்ட நீதியமைச்சர் தவிர்த்திருப்பது மிகுந்த கவலைக்குரியது என மக்கள் சார் கூட்டு எதிர்க்கட்சி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes