General15 July 2026

‘சிலோன் டீ வில்லேஜ்’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!


இலங்கையின் தேயிலை கைத்தொழில் துறையின் இலக்குகளை அடைவதற்கும், சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நோக்கமாகக் கொண்டு, "சிலோன் டீ வில்லேஜ்" என்ற தேசிய வேலைத்திட்டம் இன்று (15) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, நாடு முழுவதும் உள்ள 144 தேயிலை கிராமங்களில் இந்த வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த திட்டத்தை நாடு முழுவதும் 500 தேயிலை கிராமங்களாக விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வருடாந்த தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராம்களாக அதிகரிப்பதையும், தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் விளைச்சல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்தல், உற்பத்தியாளர்களின் வருமானத்தை மேம்படுத்துதல், தேயிலை உற்பத்தியில் பெறுமதி சேர் உற்பத்திகளை ஊக்குவித்தல், தேயிலை தோட்டங்களை சுற்றுலாத்துறையுடன் இணைத்தல், நவீன மற்றும் நிலையான விவசாய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் கூட்டுறவு முறைகளை வலுப்படுத்துதல் போன்றவை இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

முதல் கட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 144 தேயிலை கிராமங்களுக்கு, ஒருங்கிணைந்த அபிவிருத்தி தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

இதன்கீழ் மாதிரி தேயிலை தோட்டங்கள், புதிய தேயிலை நாற்றுமேடைகள், சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கான காப்புறுதித் திட்டங்கள், ஓய்வூதியத் திட்டங்கள், சலுகை அடிப்படையிலான கடன் வசதிகள், இயந்திரமயமாக்கல் மற்றும் கைவினைத் தேயிலை உற்பத்திக்கான பயிற்சிகள் போன்றவை வழங்கப்படவுள்ளன.

மேலும், மீளுருவாக்க விவசாயம் குறித்த பயிற்சிகள் மற்றும் வருமானத்தை பெருக்கக்கூடிய மேலதிக வாழ்வாதாரத் திட்டங்களும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

2026 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து 144 தேயிலை பரிசோதகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக இந்த முதற்கட்ட பணிகள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes