General29 July 2026

போதைப்பொருளின் சந்தை விலை நிர்ணயம்: அநுரவுக்கு விளக்கமளித்த அதிகாரிகள்!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களின் சந்தை மதி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது குறித்துக் ஜனாதிபதி காவல்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

காலி மாவட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் "ரதம எகட" போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து காவல்துறை அதிகாரிகள், இந்தக் கூட்டத்தில்; விளக்கமளித்தனர்.

இதன்போது, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பணமதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்று அதிபர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த காவல்துறையினர், பல்வேறு பகுதிகளில் நிலவும் போதைப்பொருளின் தற்போதைய சந்தை விலை அடிப்படையிலேயே மதிப்பீடுகள் கணக்கிடப்படுவதாக தெரிவித்தனர்.

உதாரணமாக, காலி பகுதியில் 70 முதல் 80 மில்லிகிராம் கொண்ட ஹெரோயின் பொதி; ஒன்று சுமார் 2,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், கொழும்பு உட்பட்ட நாட்டின் பிற பகுதிகளில் இதன் விலைகள் மாறுபடுவதாகவும் காவல்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

காலி மாவட்டத்தில் இந்த வருடத்துக்குள் இதுவரை 2,607 போதைப்பொருள் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் சுமார் 119 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துகள் மற்றும் வாகனங்கள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes