General03 August 2026

கடற்படையினரின் தேடுதல் வேட்டை: கடற்கரையில் கைவிட்டுச் செல்லப்பட்ட 234 கிலோ பீடி இலைகள்!

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு, பிரவுன்ஸ் கடற்கரைப் பகுதியில் (01) இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான 'கெலானி' நிறுவனத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நீர்கொழும்பு காவல்துறையினருடன் இணைந்து கடற்படையினர் இந்தத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட 5 மூடைகள் சோதனையிடப்பட்டன.

அந்த மூடைகளிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 234 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடற்படையினரின் சுற்றுக் காவல் நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சிய கடத்தல்காரர்கள், குறித்த பீடி இலை மூடைகளை கடற்கரையில் கைவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
 
இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes