General03 August 2026

மலையக மக்களுக்கு காணி உரிமை; புதிய ஒப்பந்தங்களில் சேர்க்க எதிர்பார்ப்பு - ஜனாதிபதி

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களின் வதிவிடத் தேவைக்காக 10 பேர்ச் காணியை வழங்குவது தொடர்பான சட்டபூர்வ உரிமையை உறுதிப்படுத்தும் திட்டம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்

6 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இதன்போது, அரசியலமைப்புத் திருத்தம், மாகாண சபைத் தேர்தல், வடக்கு - கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் காணி மற்றும் வீடமைப்புப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அரசியலமைப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் நிலவும் சிக்கல்கள் குறித்து ஆராயத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதுமே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனக் குறிப்பிட்டார்.

அவசரமாகக் கொண்டுவரப்படும் அரசியலமைப்புத் திருத்தத்தை விட, புதிய மக்கள் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வதே அவசியமானது என்றும் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் 1948, 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளைப் போன்று ஒரு தரப்பினரால் மாத்திரம் உருவாக்கப்படும் அரசியலமைப்பாக இது இருக்கக் கூடாது எனவும், சமூகப் பரிசீலனையுடன் இது மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

மலையக மக்களின் காணி உரிமை மற்றும் உட்கட்டமைப்பு

தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களுக்கு வதிவிடத் தேவைக்காக 10 பேர்ச் காணியை வழங்கும் திட்டம் குறித்தும் கவனஞ்செலுத்தப்பட்டது. பெருந்தோட்டக் தோட்டக் கம்பனிகளுடன் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய ஒப்பந்தங்களில் இதற்கான சட்டபூர்வ உரிமையை வழங்கும் சரத்துகள் உள்வாங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மலையகப் பகுதிகளில் நிலவிய நில வெடிப்புகள் தொடர்பில் கவனஞ்செலுத்தியுள்ளதாகவும், மத்திய மலையகத்தின் நிலையான தன்மையை உறுதிப்படுத்தத் தனி அதிகாரசபையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 2027 ஆம் ஆண்டு பாதீட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் வி. இராதாகிருஷ்ணன், இந்த திட்டம் தற்போதைய அரசாங்கத்தில் நிறைவேறும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அதேநேரம், இந்திய வீட்டுத் திட்டப் பயனாளிகள் நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கு காணி மற்றும் வீடமைப்பு நடவடிக்கைகள்

மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தமாக வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, போரினால் வீடுகளை இழந்த மக்களுக்கு 13,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டு பாதீடுகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

அத்துடன், 'டித்வா' அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்காலிக வீடுகள் மற்றும் வாடகை வீட்டுக் கொடுப்பனவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபை போன்றவற்றின் பழைய கொள்கைகளால் வடக்கு, கிழக்கு மக்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்தும் இதன்போது பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக்கொண்டு சென்றனர்.

தமிழ் மொழி பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாட இவ்வாறான கூட்டணியை உருவாக்கியமைக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்படும் நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்டார்.

Related recommendation
Hiru TV News | Programmes