International04 August 2026

ஈரானுடன் போரைத் தவிர்க்கும் ட்ரம்ப் - பின்வாங்கிய அமெரிக்கா

ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் எனவும், புதிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
 
இருப்பினும், "நாங்கள் எந்தவொரு குழுவையும் சந்திக்கவோ அல்லது வேறு நாட்டிற்கு செல்லவோ திட்டமிடவில்லை" என ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் மறுத்துள்ளார்.

ஈரான் மீதான மிகப்பெரிய தாக்குதல்களைத் தவிர்த்து, தூதரக வழிமுறைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானின் அணுசக்தி விவகாரங்கள் தொடர்பில் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எந்தவொரு வெளிநாட்டுத் தலையீடும் இன்றி, ஓமான் நாட்டுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் மட்டுமே ஈரான் கவனம் செலுத்தி வருகிறது.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கான புதிய பாதையை அமைப்பது குறித்தே இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

கட்டார், சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த மோதலைத் தீர்க்க மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்காவின் தாக்குதல் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை செய்திகளால் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை பீப்பாய்க்கு 4 டொலருக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

இருப்பினும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பிட் ஹெக்செத் எச்சரித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes