General11 August 2026

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் அரசாங்கம் ஆலோசனை

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பரிசீலித்த பின்னர், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, தாமும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது தொடர்பான தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கியதாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes