General13 August 2026

மனிதர்களின் மனநிலையை துல்லியமாக அறியும் நாய்கள்: வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்!

மனிதர்களின் முகபாவனைகளில் வெளிப்படும் உணர்வுகளை நாய்களால் வேறுபடுத்தி அறிந்துகொள்ள முடியும் என்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்துள்ளதாக வியன்னா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாய்களின் மூளைச் செயல்பாடுகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக 12 நாய்களின் மூளைச் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் மனிதர்களின் முகப்படங்கள் அவற்றுக்குக் காண்பிக்கப்பட்டுள்ளன.

ஆய்வில், மகிழ்ச்சியான முகங்களைப் பார்த்தபோது நாய்களின் மூளையில் உயர்நிலை அறிவாற்றல் செயல்பாடுகள் மற்றும் வெகுமதி உணர்வுடன் தொடர்புடைய Temporal Cortex மற்றும் Caudate Nucleus ஆகிய பகுதிகள் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மறுபுறம், கோபம், பயம் மற்றும் சோகம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் முகங்களைப் பார்த்தபோது, இந்த குறிப்பிட்ட மூளைப் பகுதிகளில் அதே அளவிலான செயல்பாடு காணப்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஒட்டுமொத்த மூளையின் செயல்பாட்டை ஆய்வு செய்தபோது, பயம், கோபம் மற்றும் சோகம் ஆகிய எதிர்மறை உணர்வுகளை நாய்கள் தனித்தனியாக வேறுபடுத்தி அறிந்துகொள்ளக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களுடன் நீண்டகாலமாக இணைந்து வாழ்ந்ததன் விளைவாக, மனிதர்களின் முகபாவனைகளைப் புரிந்துகொண்டு அவர்களுடன் ஒத்துழைக்கும் வகையில் நாய்கள் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கலாம் என அறிவியல் நிபுணர் லோரா குவாயா தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்ட ஆய்வுகளில், மனிதர்களின் உடல் மொழி, குரலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வாசனை உள்ளிட்ட பல்வேறு சைகைகளை நாய்கள் எவ்வாறு ஒருங்கிணைத்து மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து நாய்களும் அன்பான குடும்பங்களில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணிகள் என்பதுடன், வேறுபட்ட சூழலில் வளர்ந்த நாய்கள் மனிதர்களின் உணர்வுகளுக்கு மாறுபட்ட விதத்தில் பதிலளிக்கக்கூடும் என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes