General15 August 2026

எல் நினோ வெப்ப அலையால் மனநலப் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம்: மருத்துவர் ரூமி ரூபன் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் எல் நினோ காரணியால் ஏற்படும் கடுமையான வெப்பமான காலநிலை காரணமாக, மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காலி தேசிய மருத்துவமனையின் மனநல ஆலோசகர் மருத்துவர் ரூமி ரூபன் எச்சரித்துள்ளார்.

நீண்ட நேரம் சூரிய வெளிச்சத்தில் இருப்பதால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இது மனிதர்களின் மனநலத்தைப் நேரடியாகப் பாதிக்கின்றதாக அவர் விளக்கியுள்ளார்.

அதிக வெப்பமான சூழல் மனிதர்களிடம் கோபத்தை தூண்டுவதுடன், சகிப்புத்தன்மையைக் குறைத்து, மோதல் போக்கை உருவாக்குகிறது என்று அறிவியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இத்தகைய பாதிப்புகள் நாளடைவில் தீவிரமான உளவியல் சிக்கல்களாக மாறக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சிறுவர்களும் முதியவர்களும் இந்த வெப்பமான காலநிலையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக தெரிவித்ததோடு, வாகன ஓட்டிகளிடையே வீதி கோபமும் (road rage), குடும்பங்களில் வன்முறைகளும் அதிகரிக்கக்கூடும் என்றும், ஏற்கனவே மனநலச் சிகிச்சையில் இருப்பவர்களின் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அபாயத்தைக் குறைக்கப் பொதுமக்கள் நேரடியாகச் சூரிய வெளிச்சத்தில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதிகளவில் தண்ணீர் பருக வேண்டும் என்றும் மருத்துவர் ரூமி ரூபன் அறிவுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes