General19 August 2026

டிட்வா சூறாவளி புனரமைப்பு மற்றும் வாழ்வாதார உதவி: ADB உடன் $200 மில்லியன் கடன் ஒப்பந்தம்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்பு மற்றும் வாழ்வாதார மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திட்டத்திற்கான ஒப்பந்தங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கியும் (ADB) இலங்கை அரசாங்கமும் கையொப்பமிட்டுள்ளன.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின்படி, டிட்வா சூறாவளிக்குப் பிந்திய புனரமைப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவுத் திட்டம்' 2026 முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டம் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்புதல், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்தல் மற்றும் எதிர்காலக் காலநிலை பேரிடர்களுக்கு எதிரான மீள்திறனை வலுப்படுத்துதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைத்தல், நீர்ப்பாசன அமைப்புகளை மீட்டெடுத்தல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விவசாய வாழ்வாதார உதவிகளை வழங்குதல் மற்றும் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான மானிய உதவிகளை வழங்குதல் ஆகிய பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முதன்மை அமைப்பாகச் தொழிற்படவுள்ளதுடன், இதன் பணிகள் மூன்று பிரதான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் சேதமடைந்த வீதி உள்கட்டமைப்புப் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையும், நீர்ப்பாசன அமைப்புகளின் மீட்புப் பணிகளைப் நீர்ப்பாசனத் திணைக்களமும் மகாவலி அதிகார சபையும் கையாளும். அதேபோன்று, விவசாய ஆதரவுப் பணிகளை விவசாய அபிவிருத்தித் திணைக்களமும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுவசதி உதவிகளைத் தேசிய இடர் நிவாரண சேவை மையமும் வழங்கவுள்ளன.

கொழும்பிலுள்ள திறைசேரியில் நடைபெற்ற நிகழ்வில், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெருமவும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் அதன் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஷானன் கௌலினும் (Shannon Cowlin) இந்தக் கடன் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர்.
Related recommendation
Hiru TV News | Programmes