General19 August 2026

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது வரம்பை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவினால் குறித்த திருத்தச் சட்டமூலம் முதலாம் வாசிப்பிற்காக நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

இந்த திருத்தச்சட்டம், அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு மீதான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு அனுப்பப்பட்டதுடன், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோருவதற்கு அரசியலமைப்பின் விதிகளுக்கு இணங்க இடம் வழங்கப்படும்.

இதன்படி குறித்த திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்பு தன்மை தொடர்பில் சவாலுக்குட்படுத்த விரும்பும் தரப்பினர் அந்த திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட தினம் முதல் 14 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது.

அவ்வாறு மனுக்கள் முன் வைக்கப்பட்டால் அது தொடர்பில் விசாரணை செய்து 21 நாட்களுக்குள் தமது வியாக்கியானத்தை உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் சமர்பிக்கப்பட்ட 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தி 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Related recommendation
Hiru TV News | Programmes