General20 August 2026

வங்கித்துறை கடன் வழங்கல்: மத்திய வங்கியின் புதிய ஆய்வறிக்கை!

இலங்கையின் வங்கித் துறையில் கடன் வழங்குவதற்கான விருப்பம் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் அதிகரித்துள்ள போதிலும், அதன் வளர்ச்சி வேகம் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் மந்தமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய கடன் வழங்கல் ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பணவியல் கொள்கை இறுக்கமாக்கலைத் தொடர்ந்து நிலவும் கடுமையான பணச் சூழலே இதற்கு முக்கிய காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அனுமதிபெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் சிறப்பு வங்கிகளை உள்ளடக்கி நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, சில்லறை, பெருநிறுவனம் (Corporate), சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் (ஆகிய நான்கு துறைகளிலும் கடன் வழங்குவதற்கான வங்கிகளின் ஆர்வம் இரண்டாம் காலாண்டில் உயர்ந்துள்ளது.

பொருளாதார நிலைமைகளின் முன்னேற்றம், கொள்கை ஸ்திரத்தன்மை, சிறந்த திரவத்தன்மை (Liquidity) மற்றும் சொத்துக்களின் தரம் உயர்வடைந்தமை ஆகியன இதற்கு பிரதான காரணங்களாகும்.

அத்துடன், மூன்றாம் காலாண்டிலும் கடன் வழங்கும் விருப்பம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பணவீக்க அழுத்தம், செயல்பாட்டுச் செலவுகள் உயர்வு, மாற்று விகித நிலையற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் அநிச்சயங்கள் காரணமாக அதன் வேகம் மந்தமாகவே இருக்கும் என வங்கிகள் கணித்துள்ளன.

மேலும் அரசுக்கு சொந்தமான நிறுவனத் துறைக்கான கடன் வழங்கல் விருப்பம் மூன்றாம் காலாண்டில் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இரண்டாம் காலாண்டில் அனைத்துத் துறைகளிலுமான கடன் தேவை அதிகரித்துள்ளது. அதிகரித்துவரும் நடைமுறை மூலதனத் தேவைகள், குறுகிய காலக் கடன்களுக்கான தேவை மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டமை ஆகியன இதற்கு வழிவகுத்துள்ளன.

விசேடமாக, மூலோபாய உள்கட்டமைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களுக்கான நிதி வசதிகள் காரணமாக அரசுக்கு சொந்தமான நிறுவனத் துறையின் கடன் தேவை தொடர்ந்து உயர்ந்துள்ளது.

வங்கித் துறையின் மொத்த நடைமுறையில்லா கடன்களின் அளவு (அசல் அல்லது வட்டித் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பச் செலுத்தத் தவறிய கடன்கள்) இரண்டாம் காலாண்டில் ஒட்டுமொத்தமாகக் குறைவடைந்துள்ளது.

சில்லறைத் துறையின் இந்த கடன் நிலைமை சீரடைந்தமையே இதற்கு பிரதான காரணமெனினும், பெருநிறுவனம், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனத் துறைகளில் மொத்த நடைமுறையில்லா கடன்களின் அளவு அதிகரித்துள்ளது.

நாணய மாற்று விகித வீழ்ச்சியால் ஏற்பட்ட செலவு அழுத்தங்கள் மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியின் வெளிப்புற தாக்கங்களால் கடன் வாங்கியவர்களின் மீளச்செலுத்தும் திறன் பலவீனமடைந்தமையே இதற்கு காரணம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், இரண்டாம் காலாண்டில் வங்கிகளின் கடன் விண்ணப்ப நிராகரிப்பு விகிதம் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளது.

பெருநிறுவனம் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலை குறைந்தமையே இதற்கு முக்கிய காரணமாகும். இருப்பினும், கடுமையான கடன் மதிப்பீடு மற்றும் இடர் முகாமை அளவுகோல்கள் காரணமாக சில்லறை மற்றும் சிறு, நடுத்தர தொழில்முயற்சி துறைகளில் கடன் விண்ணப்ப நிராகரிப்பு விகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.%MCEPASTEBIN%
Related recommendation
Hiru TV News | Programmes