General20 August 2026

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு – அரசாங்கம் உறுதி

இஸ்ரேலில் பணியாற்றும் சுமார் 30 ஆயிரம் இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக தனியார் முகவர் நிறுவனங்கள் மூலம் செல்வது அதிகரித்துள்ளதாகவும், இதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உரிய ஒழுங்குமுறைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளுக்குச் சென்ற சில இலங்கைத் தொழிலாளர்கள் தமது தொழில் துறைகளை மாற்றியுள்ளதால், சுமார் 7 ஆயிரம் பேரை அகதிகளாகக் கருதி இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோன்ற பிரச்சினையை எதிர்கொண்ட இந்தியத் தொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கம் தலையிட்டு தீர்வு பெற்றுக்கொடுத்ததை சுட்டிக்காட்டிய சாமர சம்பத், இலங்கை அரசாங்கமும் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கைத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் தொடர்பில் முன்னாள் அரசாங்க காலத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக தொழிலாளர்களை அனுப்புவதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முறையாக ஆட்களைச் சேர்த்து, நேர்முகத் தேர்வு நடத்தி வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டிய நடைமுறை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் காலத்தில் அந்த நடைமுறையை மாற்றி, குறிப்பிட்ட நபர்களின் பட்டியலை அனுப்பி அவர்களை நிறுவனங்களுக்கு அனுப்புமாறு கடிதம் வெளியிடப்பட்டிருந்ததாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேலுக்கு விவசாயத் துறையில் வேலைவாய்ப்புக்காக அனுப்பப்பட்ட சில இலங்கைத் தொழிலாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட வேலைகளை முறையாக செய்ய முடியாத நிலையில், வேறு இடங்களில் பணியாற்ற ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகளாகக் கருதப்படும் நிலை ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மன்னிப்பு காலம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, குறித்த தொழிலாளர்களுக்கு அந்நாட்டில் சட்டபூர்வமாக வேலை செய்வதற்கான வாய்ப்பு அல்லது மாற்று வழியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இஸ்ரேல் அரசாங்கத்தினால் மீண்டும் மன்னிப்பு காலம் வழங்கப்பட்டால், அதனை முழுமையாகப் பயன்படுத்தி இலங்கைத் தொழிலாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தலையிடும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

முன்னைய காலப்பகுதியில் சுமார் 6 ஆயிரம் இலங்கையர்களை மேலதிகமாக இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடைய பணப்பரிமாற்றங்கள் மற்றும் ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாகவே இஸ்ரேல் தரப்பில் மன்னிப்பு காலம் வழங்கப்படாத நிலை ஏற்பட்டதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தொடர்ந்து தலையிட்டு வருவதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes