General27 August 2026

நுவரெலியா - கிரெகரி வாவியின் நீரை குடிப்பதால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

நுவரெலியா கிரெகரி வாவியின் நீரைப் பருகுவது மனிதர்களின் உயிருக்குக்கூட ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திட்டக் குழுக் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மலையகப் பகுதிகளில் இருந்து அடித்து வரப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பல்வேறு இரசாயனக் கழிவுகள் போன்ற மாசுப் பொருட்கள் நீண்ட காலமாக இந்த வாவியினுள் கலப்பதே கிரெகரி வாவியின் நீர் தீவிரமாக அசுத்தமடைந்துள்ளமைக்கு முக்கிய காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, வாவியின் நீரில் இருக்க வேண்டிய பொஸ்பேட் அளவானது 0.20 மில்லிகிராம் என்ற மட்டத்துக்கு பதிலாக 1.04 மில்லிகிராம்களாகவும், நைதரசன் அளவானது 0.50 மில்லிகிராம் இருக்க வேண்டிய நிலையில் 3.70 மில்லிகிராம்களாகவும் சடுதியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக முறையான பராமரிப்பு இன்றியும், உரிய நியமங்களுக்கு ஏற்ப நிர்வகிக்கப்படாமையுமே இந்த நிலைக்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த நிலைமை குறித்து சுற்றாடல் அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து கூட்டுக் குழுவொன்றின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes