International27 August 2026

பாலஸ்தீன நடவடிக்கை (Palestine Action) அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டு அமெரிக்கா பொருளாதாரத் தடை!

இங்கிலாந்தை தளமாகக் கொண்டு செயல்படும் 'பாலஸ்தீன நடவடிக்கை' (Palestine Action) அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்க திறைசேரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ”பாலஸ்தீன நடவடிக்கை குழு”, 2020 ஜூலை முதல் பல்வேறு பயங்கரவாதச் செயல்களை ஆதரித்துள்ளதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசால் கடந்த 2025ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட இந்த அமைப்புக்கு, தற்போது அமெரிக்காவும் தடை விதித்துள்ளது.

அத்துடன், அமெரிக்காவுக்குள் உள்ள அந்த அமைப்பின் சொத்துகளையும் முடக்கியுள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு பதிலளித்துள்ள அந்த அமைப்பின் இணை நிறுவனர் ஹுடா அமோரி (Huda Ammori), தாங்கள் செய்த செயல்கள் எப்போதும் உயிர்களைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டவையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அமெரிக்காவின் இந்த செயல் கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent), தீவிரவாதக் குழுக்களின் நிதியாதாரங்கள் முழுமையாகத் துண்டிக்கப்படும் வரை தங்களது பொருளாதார நடவடிக்கைகள் தொடரும் என எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலுடன் தொடர்புடைய ஆயுத ஆலைகளுக்கு எதிராக நேரடிப் போராட்டங்களை முன்னெடுத்து வந்த இந்த அமைப்பு, இங்கிலாந்தில் ஏற்கனவே சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்தத் தடைக்கு எதிராகப் போராடிய 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதும், இதன் சில உறுப்பினர்கள் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related recommendation
Hiru TV News | Programmes