General30 August 2026

900 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய நேபாளப் பாடசாலை அதிபரின் துரித நடவடிக்கை!

நேபாளத்தில் வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்த நுவாகோட் மாவட்டத்தில் உள்ள திரிபுவன் திரிசூலி இடைநிலைப் பாடசாலையின் அதிபர் ராஜேந்திர தவாடி, சரியான நேரத்தில் தான் எடுத்த முடிவால் 900 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

இந்தப் பாடசாலையில் மொத்தம் 1,600 க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில், அந்தப் பகுதியில் வெள்ள அபாயம் குறித்து சில நிமிடங்களுக்குள் வெவ்வேறு நபர்களிடமிருந்து தனக்கு தொடர்ச்சியாக நான்கு எச்சரிக்கைத் அழைப்புகள் வந்ததாக அதிபர் ராஜேந்திர தவாடி பிபிசி செய்திச் சேவைக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, வெள்ளநீர் ஏற்கனவே மேல்மட்டப் பகுதியான பெத்ரவாதி குடியேற்றத்துக்குள் புகுந்துவிட்டதாக அந்த அழைப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தாமதிக்காமல் மாணவர்களை உடனடியாக வெளியேற்ற அவர் முடிவு செய்தார்.

“வெள்ளம் வரும் என்ற எச்சரிக்கை பொய்யாகப் போய், அன்றைய வகுப்புகள் தடைபட்டாலும் அதனால் பெரிய இழப்பு எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை; ஆனால், ஒருவேளை வெள்ளம் வந்துவிட்டால் அது நூற்றுக்கணக்கான பிள்ளைகளின் உயிரைப் பறித்துவிடும் பேரழிவாக மாறிவிடும்” என எண்ணியதாக அவர் கூறினார்.

அவர்கள் உயர்வான பகுதிக்கு வெளியேறிச் சென்றுகொண்டிருந்த போதே, ஆற்றிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் இருந்த விடுதி கட்டடம் வெள்ளநீரில் மூழ்கியதை அவதானிக்க முடிந்ததாகக் கூறியுள்ளார்.

"நாங்கள் இன்னும் 10 நிமிடங்கள் தாமதித்திருந்தால், மாணவர்களும் நானும் இன்று உங்களிடம் பேசியிருக்க முடியாது" என அவர் தெரிவித்துள்ளார்.



Related recommendation
Hiru TV News | Programmes